Tuesday, April 25, 2006

நிறுத்துங்கள் 'கால்கரி' சிவா

முசுலிம்களின் மீதான காழ்புணர்ச்சியையும் துவேசத்தையும் எப்படியெல்லாம் வெளிக்காட்ட முடியும் என்பதற்கு கால்கரி சிவா என்பவரின் தொடர்கள் ஒரு உதாரணம். செளவுதியிலும் அபுதாபியிலும் இருந்து விட்டு கனடாவில் சொகுசு வாழ்க்கையின் மிதப்பில் உண்டவீட்டுக்கு ரெண்டகம் செய்யும் வகையான அனுபவங்களை அண்ணன் சிவா எழுதி வருகிறார்.

அவரின் பதிவுகளில் அங்கங்கு போலி நடுநிலைவாதம் எழுந்தாலும் ஒட்டு மொத்தமாக இசுலாமியரை குறிவைத்து எழுதி வருகிறார் என்பது மட்டும் தெளிவாகிறது.

நம் நாட்டில் மதத்தாலும் சாதிகளாலும் தகுதியானவர்களுக்கு குறைந்த சம்பளத்திற்குக் கூட வேலை கிடைக்காமல் இருந்த காலகட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வேலை தேடி வந்தவர்களிடமிருந்து பணம் பெறாமல் இந்தியர்கள் என்றால் நம்பகமானவர்கள், நிரம்ப திறமை கொண்டவர்கள் , சகிப்புத்தன்மையாளர்கள் என்ற தகுதிகளை வைத்து வேலைவாய்ப்பு அங்கீகாரத்தைக் உலகிலேயே முதன் முதலில் கொடுத்து, அவர்கள் தகுதியாக இருந்தாலும் உள்நாட்டில் கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத சமபளத்தைக் கொடுத்து சிலகாலம் உழைத்து விட்டு நாடு திரும்பியதும் வாழ்க்கை முறையையே மாற்றி போடும் வளைகுடா நாடுகளில் என் நன்றிக்குறிய நாடு "செளதி அரேபியா".

சமீபத்திய பதிவில் அவருக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைக்க தாமதமானதற்கும் பிறகு கிடைத்ததத்ற்கும் எழுதியுள்ள காரணங்களைப் படிக்கும் போது சிரிப்புதான் வருகிறது! நானும் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக சவூதி ரியாத்தில் பணி புரிந்து வருகிறேன். உலகெங்கும் பரவியுள்ள நயவஞ்சகர்களும் ஏமாற்றுக்காரர்களும் செளவுதியில் மட்டும் இருக்க மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கையில் நான் செளவுதிக்கு வரவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்.

தமிழர்களாகிய நாம் மதமாச்சரியங்களை பின்வைத்து சகோதர உணர்வுடன் கருத்துப்பரிமாறும் களத்தில் இதுபோல் துவேசமாக அவதூறுகளைக் கொண்டு எழுதுவது அவசியமா என் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும். சவூதியில் தொழிழாளர் நலச்சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் இங்கு பணிபுரியும் வெளிநாட்டவரின் வயிற்றில் பால் வார்த்துள்ளது.

சௌதி அரேபியாவின் தொழிலாளர் நலச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சலுகைகளை இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர். இம்மாதம் 23ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த சட்டத் திருத்தத்தின்படி,

தொழிலாளர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டது முதல் வேலை முடிந்து அனுப்பப்படும் வரை அவர்களது வேலைக்கான பர்மிட்டை ரினீவைல் செய்வது உள்ளிட்ட பணி தொடர்பான அனைத்து செலவுகளையும் அந்ததந்த நிறுவனங்களே ஏற்க வேண்டும்.

மேலும் பணிக் காலம் முடிந்து செல்லும் தொழிலாளர்களுக்கு அவர்களுக்குத் தர ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்து சலுகைகளும், படிகளும் முறையாக வழங்கப்பட வேண்டும்.

மேலும் தங்கள் நாட்டில் எந்த வேலைக்காக அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்களோ அதே வேலையைத் தான் சௌதியிலும் வழங்க வேண்டும். இங்கு வந்த பின்னர் வேறு பணிக்கு அவர்களை கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கக் கூடாது.

தொழிலாளியின் ஸ்பான்ஸர் மாறும்போதும், வேலை மாறும்போதும் கட்ட வேண்டிய கட்டணம், அவரது எக்ஸிட்ரீ என்ட்ரி விசாவுக்கான கட்டணம் ஆகியவற்றை அந்ததந்த நிறுவனங்களே செலுத்த வேண்டும். ஒப்பந்தம் முடிந்து செல்லும் தொழிலாளிக்கு விமான டிக்கெட்டையும் அந்த நிறுவனமே வழங்க வேண்டும்.

சௌதியில் பணியாற்றும்போது இறக்கும் தொழிலாளியின் உடலை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பும் பொறும்பும் அந்தந்த நிறுவனங்களையே சாரும். அதற்கான கட்டணத்தை அந்த நிறுவனமே வழங்க வேண்டும். இவ்வாறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Wednesday, December 14, 2005

மாற்றார் தோட்டத்து மல்லிகை - சுவாமி விவேகானந்தர்

"மாற்றார் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்றார் அறிஞர் அண்ணா. உண்மையான ஆன்மீகவாதிகள் தன் மதம் தன்னை நெறிப்படுத்துவது போல் பிற மதங்கள் அம்மதத்தவரை நல்வழிப்படுத்தும் என்று நம்பினர்.

ஆன்மீகவாதிகள் தங்கள் மதங்களைப் பற்றிச் சொல்வதில் வியப்பொன்றும் இல்லை. பிற மதங்களைப் பற்றி என்ன கருத்து வைத்திருந்தனர் என்று அலசி மதநல்லினக்கத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த என்னால் இயன்ற சிறு முயற்சியாக ஒவ்வொரு மதம் பற்றி பிற மதத்தவர் கொண்டிருந்த கருத்துக்களை பகிந்து கொள்ளப் போகிறேன்.

சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். தீவிர இந்துவாக இருந்தபோதிலும் பிற மதங்களை நேசித்தார்.கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் வருட உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார்.

சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் பாஸிஸ இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.

முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.

"The HINDUS may get the credit of arriving at it earlier than other races, yet
practical Advaitism, Which looks upon and behaves to all mankind as one's own
soul was never developed among the Hindus. ' Letters of Swami Vivekananda p 463


''சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்." என்றார் இந்த நல்லிணக்க பிதாமகன். மேலும்

'On the other hand, my experience is that if ever any religion approached to
this equality in an appreciable manner, it is Islam and Islam alone, I am firmly
persuaded, therefore, that without the help of practical Islam, Theories of
Vedantism, however fine and wonderful they may be, are entirely valueless to the
vast mass of mankind.... "Letters of Swami Vivekananda p 463


கிறிஸ்தவர்கள்,முஸ்லிம்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் தலித்துகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம். இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,

''பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்துவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது" என்று கூறினார்.
இந்து மதத்தின் ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.

Swami Vivekananda on the issue (Collected works- Vol. VIII, page 330). Says
Swamiji Why amongst the poor of India so many are Mohhamedans? It is nonsense to say that they were converted by the sword, it was to gain liberty from Jamindars
(Feudal lords) and priests. Islam, contrary to the popular belief came to India
through the Arab traders who used to visit the Malabar coast for trade, and it
were the Hindu Kings who built the initial Mosques to sustain the trade. Also
there are still communities in the coastal areas who practice mixed, Hindu and
Muslim, rituals.

கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,

மலபார் பகுதியில் நடந்தது என்ன? ஏழை, எளிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர்களது வீடுகள் அகதிகள் முகாம்களைப் போல ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விழுந்தால் கூட நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இவ்வளவுக்கும் காரணம் உங்களது கேடுகெட்ட ஜாதி முறைதான். அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அல்லது இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கிறது. நிலமை இப்படி இருக்கும் போது, நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது உங்கள் மதத்தினுடைய பழமையான பழக்க வழக்கங்களையும், ஜாதி முறையையும் தானே தவிர நிச்சயமாக முஸ்லிம்களை எதிர்த்து அல்ல."

இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர், அவர் மேலும் பேசுகிறார் ..

''இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்" இன்றுள்ள நிலைகளுக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது.

இந்துக்கள் புத்தமதத்திற்கு மாறியதற்கும் அடிப்படைக் காரணம் ஜாதிய ஒடுக்குமுறைதான் என்பதையும் விவேகானந்தர் தெளிவாக கூறியுள்ளார். அவர் கேட்கிறார்.

''புத்தப் புரட்சி இல்லாமல் செல்வாக்கு மிகுந்த மேல் ஜாதியினரின் கொடுங்கோன்மையிலிருந்து அவதிக்குள்ளாயிருக்கும் லட்சக் கணக்கான கீழ்ஜாதி மக்களுக்கு வேறு எது விடுதலை அளித்திருக்கும்."

என்று விவேகானந்தர் வினா தொடுத்தார். ஜாதியக் கொடுமையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரே பின்னாளில் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்பது மனங் கொள்ளத்தக்கது.

பசுக்கள் புனிதமானது. ஆனால் இஸ்லாமியர்கள் பசு மாமிசத்தைப் புசிக்கிறார்கள். எனவே அவர்கள் நமது எதிரிகள் என்று கூறினர். அரியானா மாநிலத்தில் இறந்து போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. ''இறந்து போன பசுமாடு, உயிருள்ள தலித்துகளை விட புனிதமானது..?" என்று கூறுகிறார் ஒருவர்! ஆனால் விவேகானந்தர் பார்வை வித்தியாசமானது.
ஒருமுறை பசுபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க வந்தார்கள்.

இந்து மதத்தின் புனித சின்னமான பசுக்களை பாதுகாக்க உங்களால் இயன்ற நன்கொடையைத் தாருங்கள்..! என்று வந்தவர்கள் கேட்டார்கள்.

அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் சுருண்டு விடுந்து செத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிஜி வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். 'பட்டினியால் சாகும் மனிதர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்வீர்களா?

வந்தவர்கள் பதில் சொல்லும் போது ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன். அவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது, பசுக்களைக் காப்பாற்றுவது தான் எங்கள் கடமை"" என்றார்கள்.

வெகுண்டெழுந்த விவேகானந்தர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப் பலன் என்றால், பசுக்கள் சாவதும் அதன் கர்மப்பலனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத உங்களுக்கு பசுக்களைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது" என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.

அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் 'சகோதரர், சகோதரிகளே..!"" என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும்.

இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு அடங்கி நடத்த வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு.

''என்னுடைய மனக்கண்ணில் எதிர்காலம் குற்றம் குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடும். வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான, யாராலும் அடக்க முடியாத இந்தியாவாகத் திகழும்."

இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனா..!

Thursday, November 17, 2005

குறைந்தது 3 குழந்தைகளை பெற்றெடுங்கள் ஆர்எஸ்எஸ் அறிவுரை

RSS இயக்கத்தின் தலைவர் சுதர்ஸன் டெல்லியில் பேசியுள்ளதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. வீட்டுக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தை இந்துக்கள் பின்பற்றக் கூடாது எனக் கூறியுள்ளார். வீட்டுக்கு குறைந்தபட்சம் 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

பெருகி வரும் மக்கள் தொகை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடும்பக் கட்டுப்பாடு என்பது தங்களது மதத்தின் கொள்கைகளுக்கு விரோதமானது என இசுலாமியத் தலைவர்கள் கூறியுள்ளனர்.(உண்மையாவென்று இசுலாமியர்கள்தான் தெளிவு படுத்த வேண்டும்) ஆனால், இந்த மதரீதியிலான 'அறிவுறுத்தல்களையும்' தாண்டி முசுலீம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து தான் வருகின்றனர்.
(அப்படீன்ன முசுலிம் சமுதாயத்தவ்ர்கள் அவர்களின் மதத்தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்தானே!)

அதே போல இந்துக்களும் பெரும் அளவில் குடும்பக் கட்டுபாட்டை செய்து வருகின்றனர். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினால் தான் நாடு உருப்பட முடியும் என்ற நிலையில், வீட்டுக்கு ஒரு குழந்தை என்ற பிரச்சாரத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செய்து வருகின்றன.

இந் நிலையில் மத்திய திட்டக் கல்வி என்ற அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள '2010ல் இந்தியா மதங்களும் மக்களும்' என்ற அறிக்கையை ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சன் வெளியிட்டார். இதன் பின் அவர் பேசியதாவது:

1) வீட்டுக்கு இரண்டு குழந்தை, ஒரு குழந்தை என்ற பிரச்சாரத்தை எல்லாம் கேட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். அப்படிச் செய்தால் அடுத்த 120 ஆண்டுகளில் உங்கள் பரம்பரையில் குழந்தையே இருக்காது.
(அடப்பாவிங்களா இதுநாள் வரையில் நிரந்தர குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டவர்களுக்கு பரம்பரை 120 வருஷம் தானா?)

இதனால்

  • குறைந்தபட்சம் வீட்டுக்கு 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • கூடுதலாக பெற்றாலும் மிக நல்லது.
  • குறைவான குழந்தைகள் பெறுவது மக்கள் தொகையில் சமமின்மையை ஏற்படுத்திவிடும்.
  • மக்கள் தொகை பெருக்கத்தால் வேலை வாய்ப்புக்கள் கிடைக்காது என்பது சரியல்ல.
  • சுய வேலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
  • யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது.

(இதையே இசுலாமிய மதத்தலைவர்கள் சொன்னால் குற்றம். ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொன்னால் அறிவுரை!)

தலித் கிருஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கக்கூடியதல்ல. கிருஸ்துவர்களாக மதம் மாறிய தலித்துகள் சர்ச்சுகளில் தங்களுக்கு அதிக அதிகாரம் கேட்பதால் அவர்களது கவனத்தை திசை திருப்ப இது போன்ற கோரிக்கையை கிருஸ்துவர்கள் முன் வைக்கின்றனர். (இசுலாமியர்களை சாடும்போது கிறிஸ்தவர்களையும் சாடினால்தானே RSS உண்மையான மத சார்பற்ற இயக்கமாகும்)

முஸ்லீம்கள் மத்தியில் உள்ள தலாக் முறையிலான விவாகரத்து ரத்து செய்யப்பட வேண்டும். மூன்று முறை தலாக் என்று சொல்லி எந்தப் பெண்ணையும் தெருவில் தள்ளுவதை ஏற்க முடியாது. (இதை முசுலிம்களே தற்போது சொல்லி வருவதை அறியவில்லை போலும்) நாட்டின் ஒவ்வொரு திருமணமும் ஒவ்வொரு விவாரத்தும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.

பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும். இந்தியாவில் முஸ்லீம்கள் மிகவும் பின் தங்கிய மக்களாக, ஏழைகளாக, கல்வியறிவு குறைந்தவர்களாக இருப்பது உண்மை தான். அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த இஸ்லாமிய கல்வியை நவீனப்படுத்த வேண்டும் என்றார் சுதர்சன். (உருப்படியான வார்த்தை.)

அடைப்புக் குறிக்குள் உள்ளவை நமது தில்லாலங்கடியோவ்!!!

http://thatstamil.indiainfo.com/news/2005/11/18/rss.html

Wednesday, August 17, 2005

இரு கன்னங்களிலும் அறைபவர்கள்

இசுலாமியர்களையும் முகமது நபியையும் கேவலமாக ஏசியும் பேசியும் வரும் 'ஆரோக்கியம்' கிறிஸ்தவ பெயரில் எழுதுவதன் மூலம் முசுலிம்களை இயேசு கிறிஸ்துவுக்கு எதிராகத் திருப்பி எழுதி குளிர் காயலாம் என்ற நப்பாசையில் எழுதுகிறார்.

உன்மையான ஒரு இயேசு நேசன் தன் சொல்லாலும் செயலாலும் அடுத்தவரை நோகடிக்க மாட்டான். ஒரு கண்ணத்தில் அடித்தால் மறு கண்ணத்தைக் காட்டு என்பது கிறிஸ்துவின் தாரக மந்திரம்.

எனதருமை இசுலாமிய நண்பர்களே, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கிறிஸ்தவத்தின் நல்ல பக்கங்களை எடுத்து இயம்புவது என் கடமை. ஆரோக்கியத்தின் எழுத்தில் உணர்ச்சிவசப்பட்டு, நீங்கள் ஈசா என மதிக்கும் எங்கள் இயேசுவை பரிகசித்து விடாதீர்கள்.

இனி என்னால் முடிந்தவரை கிறிஸ்தவ போதனைகளை எனது வெப்சைட்டில் இடுகிறேன். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். தெரிந்தால் சொல்கிறேன்.

சில பைபிள் வசனங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

23.5 மக்களின் கவனத்தைப் பெறுவதற்காக நன்மை செய்வதுபோல் காட்டிக்கொள்வார்கள். மக்களின் காது குளிற தேனாகப் பேசுவார்கள்.

23.6 அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் முதன்மையான இருக்கைகளை விரும்புவார்கள்.

23.28 வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கும் இவர்கள் உள்ளே போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறார்கள்.

5.39 உங்களுக்குச் தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.

5.44 உங்கள் பகைவரிடமும் அன்பு கொள்ளுங்கள்.

6.1 மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன், உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்.

6.2 நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.

6.3 நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.

6.8 நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவைகளை இறைவன் அறிந்திருக்கிறார்.

Tuesday, August 09, 2005

மாமியார் கொடுமை

இதுவரை மாமியார்கள், மருமகள்களுக்குத்தான் டார்ச்சர் கொடுத்து வந்தார்கள். இந்த உண்மைச் சம்பவத்தில் ஒரு மருமகன் பாதிக்கப்பட்டுள்ளார். பெண்ணே நீயும் பெண்ணா?

வடக்கு தில்லியில் உள்ள விகாஸ்புரியில் மனைவி, மனைவியின் தங்கையர் இருவர், மாமனார், மாமியாருடன் வசித்து வருபவர் சந்தோஷ்.
கடந்த 1995 ஆக. 6-ம் தேதி போலீஸ் நிலையத்துக்குச் சென்று மருமகன் சந்தோஷ் மீது மாமியார் புகார் கொடுத்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக மருமகன் தன்னை கற்பழித்து வருவதாகவும், அதை வெளியில் சொன்னால் தனது கணவரையும், பெண்களையும் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாகவும் அந்தப் புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து போலீஸôர் வழக்குப் பதிவு செய்து சந்தோஷைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது.
தங்கள் வீட்டில் 2 அறைகள் உண்டு என்றும், ஒரு அறையில் மற்றவர்களும், வராந்தாவில் தனது கணவரும் தூங்கும்போது, இன்னொரு அறையில் மருமகன் தன்னைக் கற்பழித்து வந்ததாக விசாரணையின்போது நீதிமன்றத்தில் மாமியார் தெரிவித்தார்.

மாமியாரின் இந்தக் கூற்றை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. தொடர்ந்து கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படும் அவர், அதை அதே வீட்டில் இருக்கும் தனது கணவரிடமோ, மகளிடமோ சொல்லாமல் மெüனமாக இருந்து வந்தது இயல்புக்கு மாறாகவும், நம்ப முடியாத வகையிலும் உள்ளது.

கற்பழிக்கப்பட்டதற்கு, மருத்துவ ஆதாரங்களை போலீஸôர் தாக்கல் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இதுபோன்ற உள்நோக்கம் கொண்ட புகாருக்கு ஆதரவாக நடந்துகொண்ட போலீஸôருக்கு கண்டனம் தெரிவித்தார்.

மகள் பெயரில் உள்ள சொத்து தொடர்பாக மருமகனுடன் தங்களுக்கு தகராறு இருப்பதை மாமியாரும் அவரது கணவரும் ஒப்புக் கொண்டிருப்பதால், சொத்து தகராறுதான் புகாருக்குக் காரணம் என நீதிமன்றம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து வழக்கிலிருந்து மருமகன் விடுவிக்கப்பட்டார்.
மாமியார் -மருமகன் உறவின் புனிதத்தையே அவர் களங்கப்படுத்திவிட்டார் என்றும் இது அவமானகரமான செயல் என்றும் அந்த மாமியாருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

தினமணி

Sunday, July 24, 2005

அடங் கொப்புரானே..!

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்புன்னு கேட்பாங்க. இங்க பாருங்க ஒரு "மந்திரவாதி பாய்" செய்த மோசடியை . மற்ற சமயங்களில் இதுபோல மந்திரவாதிகளும் போலி சாமியார்களும் உண்டு.முசுலிம்களிலுமா? அய்யோ தேவுடா!

========================சமாச்சாரம் இதுதான்========================= சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜிடம் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், அப்துல் ரஹ்மான் என்ற மந்திரவாதியை அணுகி, எனக்கும் கணவருக்கும் இடையே பிரச்சினை இருப்பதாக தெரிவித்தேன்.

இதையடுத்து எனது கணவர் பிரிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் சிறப்பு மாந்த்ரீகம் செய்ய வேண்டும் என்று அப்துல் ரஹ்மான் கூறினார். இதையடுத்து அவர் கேட்ட ரூ. 25லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்தேன்.
ஆனால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் என்னை ஏமாற்றி விட்டார். அவரைக் கைது செய்து மோசடி செய்த பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆணையர் நடராஜ் உத்தரவுப்படி அப்துல் ரஹ்மானைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டது. உதவி ஆணையர் லட்சுமி நாதன், ரஹ்மானிடம் தொலைபேசியில் பேசி தனக்குப் பிரச்சினை உள்ளதாகவும், அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பணத்துடன் வருமாறு அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். அவர் சொன்ன இடத்தில் போலீஸ் படை காத்திருந்தது. அப்துல் ரஹ்மான் அங்கு வந்தவுடன் அவரை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.

அவரது வீட்டில் போலீஸார் சோதனை போட்டபோது அங்கு ரூ. 16 லட்சம் ரொக்கப் பணம், 25 பவுன் நகைகள் இருந்தது தெரியவந்தது. மேலும் மோசடிப் பணத்தில் கிழக்கு தாம்பரத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பில் வீட்டு மனை வாங்கியிருந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அப்துல் ரஹ்மானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நன்றி:தட்ஸ்தமிழ்.காம்

Thursday, July 21, 2005

கம்ப்யூட்டர் ஜோதிட பலன்கள்!!!

ஜோதிடரின் 'அறிவுரை': 9 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை!
கோவை பீளமேடு அருகே உடையாம்பாளையம் என்ற இடத்தில் ஜோதிடரின் அறிவுரையைக் கேட்டு 9 மாதக் கைக் குழந்தையை தாறுமாறாக அடித்து, தரையில் தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

அவருக்கு 'அறிவுரை' கூறிய அந்த ஜோதிடரையும் தேடி வருகிறார்கள்.
உடையாம்பாளையம் பகுதியில் சிறிய அளவிலான சிற்றுண்டி விடுதி நடத்தி வருபவர் ரகுபதி. பொள்ளாச்சியைச் சேர்ந்த சந்திரகலா என்பவருக்கும்,
ரகுபதிக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. விக்னேஷ் என்று குழந்தைக்குப் பெயரிட்டிருந்தனர். ரகுபதி ஜோதிடத்தை அதிகம் நம்புபவர். எதைச் செய்வதாக இருந்தாதலும் ஜோதிடரின் ஆலோசனைப்படிதான் செய்வாராம்.

சமீபத்தில் கம்ப்யூட்டர் மூலம் ஜோதிடம் கூறும் ஒருவரிடம் சென்று ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அந்த முட்டாள் ஜோதிடர், உனது குழந்தையால் உனக்கு ஆபத்து உள்ளது. எனவே நீ உனது மகனை விட்டுப் பிரிய வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

இதையடுத்து மன உளைச்சலுக்கு ஆளானார் ரகுபதி. குழந்தை மீது அவருக்கு வெறுப்பு வரத் தொடங்கியது. மனைவியிடமும், இவன் என்னைக் கொல்ல வந்த எமன் என்று கூறி மகனைத் திட்டி வந்துள்ளார். இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை குழந்தையை வெளியில் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். ஆனால் கணவன் குழந்தை மீது வெறுப்பாக இருப்பதை அறிந்திருந்த சந்திரகலா, குழந்தையை கொடுக்க மறுத்துள்ளார்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் குழந்தையை வலுக்கட்டாயமாக மனைவியிடமிருந்து பிடுங்கிய ரகுபதி குழந்தையை தாறுமாறாக அடித்துள்ளார். 9 மாதமே ஆன அந்த பிஞ்சுக் குழந்தை வலியில் கதறித் துடித்துள்ளது.

இதையடுத்து ஆக்ரோஷத்துடன் அந்தக் குழந்தையை தரையில் தூக்கி வீசி பலமாக அடித்துள்ளான் தந்தை ரகுபதி. இதில் அப்பாவிப் பிஞ்சு அந்த இடத்திலேயே மயங்கி சரிந்தது. தனது கண் முன்பே குழந்தையை ரகுபதி கொடூரமாக அடித்துத் துவைத்ததைப் பார்த்த சந்திரகலா மயங்கி விழுந்தார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அண்டை வீட்டினர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரகுபதியைக் கைது செய்தனர். அவருக்கு அறிவுரை கூறிய ஜோதிடர் தலைமறைவாகி விட்டான். அவனையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

விஞ்ஞான யுகத்திலும் கம்ப்யூட்டர் பெயரால் இப்படி ஒரு கொடுமை!