Tuesday, April 25, 2006

நிறுத்துங்கள் 'கால்கரி' சிவா

முசுலிம்களின் மீதான காழ்புணர்ச்சியையும் துவேசத்தையும் எப்படியெல்லாம் வெளிக்காட்ட முடியும் என்பதற்கு கால்கரி சிவா என்பவரின் தொடர்கள் ஒரு உதாரணம். செளவுதியிலும் அபுதாபியிலும் இருந்து விட்டு கனடாவில் சொகுசு வாழ்க்கையின் மிதப்பில் உண்டவீட்டுக்கு ரெண்டகம் செய்யும் வகையான அனுபவங்களை அண்ணன் சிவா எழுதி வருகிறார்.

அவரின் பதிவுகளில் அங்கங்கு போலி நடுநிலைவாதம் எழுந்தாலும் ஒட்டு மொத்தமாக இசுலாமியரை குறிவைத்து எழுதி வருகிறார் என்பது மட்டும் தெளிவாகிறது.

நம் நாட்டில் மதத்தாலும் சாதிகளாலும் தகுதியானவர்களுக்கு குறைந்த சம்பளத்திற்குக் கூட வேலை கிடைக்காமல் இருந்த காலகட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வேலை தேடி வந்தவர்களிடமிருந்து பணம் பெறாமல் இந்தியர்கள் என்றால் நம்பகமானவர்கள், நிரம்ப திறமை கொண்டவர்கள் , சகிப்புத்தன்மையாளர்கள் என்ற தகுதிகளை வைத்து வேலைவாய்ப்பு அங்கீகாரத்தைக் உலகிலேயே முதன் முதலில் கொடுத்து, அவர்கள் தகுதியாக இருந்தாலும் உள்நாட்டில் கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத சமபளத்தைக் கொடுத்து சிலகாலம் உழைத்து விட்டு நாடு திரும்பியதும் வாழ்க்கை முறையையே மாற்றி போடும் வளைகுடா நாடுகளில் என் நன்றிக்குறிய நாடு "செளதி அரேபியா".

சமீபத்திய பதிவில் அவருக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைக்க தாமதமானதற்கும் பிறகு கிடைத்ததத்ற்கும் எழுதியுள்ள காரணங்களைப் படிக்கும் போது சிரிப்புதான் வருகிறது! நானும் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக சவூதி ரியாத்தில் பணி புரிந்து வருகிறேன். உலகெங்கும் பரவியுள்ள நயவஞ்சகர்களும் ஏமாற்றுக்காரர்களும் செளவுதியில் மட்டும் இருக்க மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கையில் நான் செளவுதிக்கு வரவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்.

தமிழர்களாகிய நாம் மதமாச்சரியங்களை பின்வைத்து சகோதர உணர்வுடன் கருத்துப்பரிமாறும் களத்தில் இதுபோல் துவேசமாக அவதூறுகளைக் கொண்டு எழுதுவது அவசியமா என் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும். சவூதியில் தொழிழாளர் நலச்சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் இங்கு பணிபுரியும் வெளிநாட்டவரின் வயிற்றில் பால் வார்த்துள்ளது.

சௌதி அரேபியாவின் தொழிலாளர் நலச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சலுகைகளை இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர். இம்மாதம் 23ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த சட்டத் திருத்தத்தின்படி,

தொழிலாளர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டது முதல் வேலை முடிந்து அனுப்பப்படும் வரை அவர்களது வேலைக்கான பர்மிட்டை ரினீவைல் செய்வது உள்ளிட்ட பணி தொடர்பான அனைத்து செலவுகளையும் அந்ததந்த நிறுவனங்களே ஏற்க வேண்டும்.

மேலும் பணிக் காலம் முடிந்து செல்லும் தொழிலாளர்களுக்கு அவர்களுக்குத் தர ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்து சலுகைகளும், படிகளும் முறையாக வழங்கப்பட வேண்டும்.

மேலும் தங்கள் நாட்டில் எந்த வேலைக்காக அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்களோ அதே வேலையைத் தான் சௌதியிலும் வழங்க வேண்டும். இங்கு வந்த பின்னர் வேறு பணிக்கு அவர்களை கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கக் கூடாது.

தொழிலாளியின் ஸ்பான்ஸர் மாறும்போதும், வேலை மாறும்போதும் கட்ட வேண்டிய கட்டணம், அவரது எக்ஸிட்ரீ என்ட்ரி விசாவுக்கான கட்டணம் ஆகியவற்றை அந்ததந்த நிறுவனங்களே செலுத்த வேண்டும். ஒப்பந்தம் முடிந்து செல்லும் தொழிலாளிக்கு விமான டிக்கெட்டையும் அந்த நிறுவனமே வழங்க வேண்டும்.

சௌதியில் பணியாற்றும்போது இறக்கும் தொழிலாளியின் உடலை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பும் பொறும்பும் அந்தந்த நிறுவனங்களையே சாரும். அதற்கான கட்டணத்தை அந்த நிறுவனமே வழங்க வேண்டும். இவ்வாறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

3 Comments:

At Tuesday, April 25, 2006 1:27:00 PM, Blogger வஹ்ஹாபி said...

நன்னிலம் நடராசன், வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் மற்றும் ஆவடி மனோகரன் ஆகியோர் திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேறக் கழகத்துக்கு வந்தவர்கள்.

தேர்தல் கால அரசியல் மேடைகளில்தாம் அதிகம் தென்படுவர்.

பேசிக் கொண்டேயிருக்கும்போது திடீரென்று பெரியாரின் மேற்கோள்கள் ஒன்றிரண்டைத் தொடுவர். "ஊறுகாயோடு உண்டால்தான் எனக்கு உணவு உண்டது போலிருக்கும். அவ்வப்போது பெரியாரைத் தொட்டுக் கொள்ளா விட்டால் பேச்சு சரியாக வராது" என்று வெற்றி கொண்டான் காரணம் சொல்வார்.

அதுபோலவே, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இழிவாகப் பேசாவிட்டால் சில பிறவிகளுக்குத் தூக்கம் வராது.

ம.மவை எடுத்துக் கொள்ளுங்கள்! இ.பாவைப் பற்றி எழுதுவதானாலும் க.விக்கு பதில் சொன்னாலும் கரு எதுவாக இருந்தாலும் 'முகமதிய மதம்', 'முகமதியர்' என்று ஏதாவது ஓர் உளறல் தொட்டுக் கொள்ள அவருக்குத் தேவை.

ம.மவின் வழித்தடத்தில் கால்கரி சிவா.

அவரை நீங்கள் தூங்க விட மாட்டீர்கள் போலும்.

 
At Tuesday, April 25, 2006 2:49:00 PM, Blogger கால்கரி சிவா said...

மரிய குமாரன்,

நான் 1000 முறைக் கூறிவிட்டேன். வியாபாரத்தில் நன்றி தேவையில்லை மற்றும் நான் இஸ்லாமியருக்கு எதிரானவர் அல்ல என்று. திரும்ப திரும்ப இதையே சொல்லி சொல்லி கொண்டிருந்தால் நான் இஸ்லாமிற்கு எதிராக மாறிவிடுவேன் அதன் பிறகு நான் சொன்னது எல்லாம் பொய் ஆகிவிடும் என கனவுகாணாதீர்கள்.
நான் முஸ்லிம்களுக்கு எதிரி அல்ல அல்ல அல்ல பல மூறை கூறிக் கொள்ளவும்

சும்மா ரீல் விடாதீர்கள். அந்த நாட்டிற்கு போய் வேலை தேட எல்லாம் முடியாது. இங்கேப் பார்த்து வேலைக் கொடுத்து பிறகு அங்கெ சேம்பர் ஆப் காமர்ஸில் பெர்மிட் எடுத்து. அதைக் கொடுத்து ஏதோ ஒரு அமைச்சகத்தில் விசா எடுத்து. அது பம்பாய்க்கு வந்து. பிறகு மருத்துவ சோதனை முடித்து விசா ஸ்டாம்ப் ஆன பிறகு தான் அந்த நாட்டிற்கே போக முடியும். இங்கே வேலைக் கிடைக்காமால் விமானம் ஏறி அங்கே போய் வேலை தேடுவதெல்லாம் யுஏஇ ல் தான். சவூதியில் அல்ல. ஏஜந்த் என்ற நரிகளிடம் நம் சகோதரர்கள் ஏமாறும் சோகங்களை மறைக்காதீர்கள்.

சவூதியின் புதிய சட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இந்த சட்டங்களை நல்ல கம்பெனிகள் பின்பற்றுகின்றன. நலிந்தவர்களுக்கு அங்கெ நடப்பவை பரவலாக இப்போது தெரிந்துவிடுவதால் அந்த சட்டம். இது சட்டத்தால் விடிவுகாலம் வந்துவிடாது. நம் சகோதரர்கள் சட்டபடி அவர்களின் உரிமைகளுக்காக போரட வேண்டும். அப்போதுதான் அங்கே விடிவுகாலம் பிறக்கும். துபாயில் சிறிது போராடி வெற்றி பெற்றுள்ளார்கள்

 
At Wednesday, April 26, 2006 11:33:00 AM, Blogger நல்லடியார் said...

//அவரின் பதிவுகளில் அங்கங்கு போலி நடுநிலைவாதம் எழுந்தாலும் ஒட்டு மொத்தமாக இசுலாமியரை குறிவைத்து எழுதி வருகிறார் என்பது மட்டும் தெளிவாகிறது.//

என்ன செய்வது சகோ.மரியகுமாரன். வலைப்பூக்களில் அதிக பின்னூட்டம் வாங்கும் யுக்தியாக இஸ்லாமிய எதிர்ப்புவாதம் இருந்து வருகிறது.

//ஏஜந்த் என்ற நரிகளிடம் நம் சகோதரர்கள் ஏமாறும் சோகங்களை மறைக்காதீர்கள்.//

அந்த ஏஜெண்டுகளும் அராபியர்களால் பயிர்றுவிக்கப்பட்டு இந்தியர்களை ஏமாற்ற அனுப்பப்பட்டவர்கள் என்று சொல்லாதவரை நன்று.

//சவூதியின் புதிய சட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இந்த சட்டங்களை நல்ல கம்பெனிகள் பின்பற்றுகின்றன. //

நல்ல கம்பெனிகளும் இருக்கின்றன எனும் நீங்கள் உங்கள் கம்பெனியில் மட்டும் நடந்த அனுபவங்களைச் சொல்லி ஒட்டு மொத்த அராபியர்களையும் பழிப்பது எந்த ஊர் நியாயம் சிவா?

வளைகுடா நாடுகளில் பிலிப்பைன் தேசத்தவரும் பணி செய்து வருகிறார்கள். அவர்களின் துயரங்களை தட்டிக் கேட்க அந்நாட்டு தூதரகங்கள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கின்றன. ஊழல் மலிந்த இந்திய அதிகாரிகள் அராபிய ஷேக்குகளின் தனி ஸ்பான்சர் பெற்று வர்த்தகக் கம்பெனிகள் நடத்தியதால் தொழிலாளர் நலத்தில் அக்கரை காட்ட முடியவில்லை. அயல்நாடுகளில் இந்தியர்களாகிய நாம் படும் கஷ்டத்திற்கு அந்தந்த நாட்டிலிருக்கும் இந்தியத் தூதரகங்களின் அலட்சியமும் மொழிப்பாகுபாடுமே காரணம். இவற்றை வசதியாக மறைத்து சுமார் 10 பதிவுகள் இட்டுர்க்கும் திரு.சிவா அவர்கள், முஸ்லிம்கள் மீது காழ்புணர்ச்சி இல்லை என்பது கால்கேரியில் தயார் செய்யப்பட்ட அல்வா! என்றுதான் சொல்ல வேண்டும்.

 

Post a Comment

<< Home